தேனி: வீரபாண்டியில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரம் நடத்தப்பட்ட கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அகற்றியுள்ளதால், கடையில் உள்ள பொருட்கள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தேனியிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து, பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை:சுருளி அருவியில் அதிக அளவு தண்ணீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளனர். இதனால், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரையோர கடைகளுக்கு உத்தரவு:மேலும், 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளதால், ஆற்றுப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் அகற்றம்:இந்த நிலையில், நேற்று (டிச.14) சனிக்கிழமை வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடையின் தகரங்களை அகற்றியுள்ளனர். இதனால், அப்பகுதியிலிருந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் காரோடு அடித்து செல்லப்பட்ட நபர் - ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்ட இளைஞர்கள்!