தஞ்சாவூர்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் வாக்கு மையம் எண் 114ல், 170 வாக்காளர்கள் பெயர் பட்டியல் விடுபட்டுள்ளதாக தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஓட்டுப் போட வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் ஓட்டு போட முடியும் என்று வாக்கு மைய அலுவலர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர்கள், கல்லணை பூம்புகார் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மண்டல துணை தாசில்தார் பிரபா ராணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சியாமளா தேவி, சத்தியா மற்றும் போலீசார், துணை ராணுவப் படையினர் விரைந்தனர்.
பேச்சுவார்த்தையில், கடந்த தேர்தலில் ஓட்டுப் போட்ட 170க்கும் மேற்பட்டோர் பெயர்கள் விடுபட்டு உள்ளது. இறந்தவர்கள் பெயரை அதிகளவில் எடுக்காமல் வைத்துள்ளனர். இதனை திட்டமிட்டுச் செய்துள்ளனர். இதற்கு காரணமானவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் பட்டியலில் எங்கள் பெயரைச் சேர்த்து மீண்டும் இந்த வாக்கு மையத்தில் மறு தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் என வலியுறுத்தினர். வாக்காளர்கள் பெயர் பட்டியலில் விடுபட்டவர்கள் மனுக்களாக எழுதி மண்டல துணை வட்டாட்சியர் பிரபா ராணியிடம் வழங்கினர்.
மேலும், தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலராகப் பணியாற்றிய தங்க நடராஜன் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும், அவரை அங்கு பணியில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்காளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அவரை பணியில் இருந்து அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு தொடங்கி மீண்டும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க:உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்! - LOK SABHA ELECTION 2024