ஈரோடு:தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் நீதிபதிகள் முன்பு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் நேற்று (ஜன.28) சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி வளர்மதி. கடந்த ஜனவரி 23ஆம் தேதி காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வளர்மதி அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில், வளர்மதியின் கழுத்தில் துளையிட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வளர்மதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வளர்மதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் விஜயன் உள்ளிட்ட போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வளர்மதியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.