தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்.. ஆளுநர் நிகழ்ச்சியில் மீண்டும் சர்ச்சை!

இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, இரண்டு வரிகள் பாடிய பின்னர், இடையில் நிறுத்தப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முறையாக பாடப்பட்டுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யங் இந்தியா சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி, மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (டிச.01) நடைபெற்றுள்ளது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “பாரம்பரியம் மிக்க தூங்காநகரம் மதுரை மாநகரத்தில் வணிகம் தலைசிறந்து காணப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவின் தலைமைத்துவத்தை உற்று நோக்கி வருகிறது. இளைய தலைமுறையின், புதிய வியூகங்கள் காரணமாக தொழில்துறையில் முன்னேற்றம் அடைகின்றனர். அவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் சமயத்தில் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். தனிமனித முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாக மாறி நாட்டின் முன்னேற்ற பாதையாக அமையும். பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும்” என்றார்.

மற்ற நாடுகளில் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும், நம்நாட்டில் இல்லை என்ற கேள்விக்கு? “ அக்னி வீரர் திட்டத்தின் மூலம் 6 வருடம் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள், இளம் வயதினர் ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், கேலோ இந்தியாவும் (Khelo India) இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

இதையும் படிங்க:"தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது"-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புதிய தகவல்!

ரஷ்யா - உக்ரைன், ஹமாஸ் - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் பதற்றம் நிகழ்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடியதில் தடுமாற்றம்: நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், தடுமாற்றம் அடைந்து மாணவிகள் முதலில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளனர். இரண்டு வரிகள் பாடிய பின்னர், இடையில் நிறுத்தப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முறையாக பாடப்பட்டுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஆளுநருக்கு திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மதுரை உடன்குடி பண்கற்கண்டு, மதுரை ஜிகர்தண்டா,தேன் மிட்டாய், மதுரை மீனாட்சி அம்மன் புகைப்படம் ஆகியவற்றை தொழிலதிபர்கள் வழங்கினர்.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது. இந்நிலையில், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details