கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி பல்வேறு தலைவர்கள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை செய்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு யோகா பயிற்சி மையங்களை சார்ந்த மாணவர்கள் பல்வேறு வகையான யோகாக்களை செய்துகாட்டினர். மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, " யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் ஆத்மாவிற்கும் நன்மை தரும் என சுட்டிக்காட்டினார். தொன்மை மிக்க யோகக்கலை என்பது நமது நாட்டினரால் மனித குலத்திற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்றும் யோகாவை எடுத்துரைத்த திருமூலரும் பதஞ்சலி சித்தர்களும் பிறந்த மண் இது என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தனிமனிதர்கள் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே யோகா நன்மை விளைவிக்கக் கூடியது என்றும் சர்வதேச எல்லைகளைக் கடந்து பல்வேறு மொழி, மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை தருவதாக யோகா உள்ளதாக கூறினார். இதை ஏற்றுக் கொள்ளும் விதமாக சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்றும் கொள்கை, மதம், தேசம் இவற்றைக் கடந்து உலக மக்கள் யோகக்கலையை போற்றி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.