சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பல்!
சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் இளம் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரோடு சைபர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி. (ETV Bharat Tamil Nadu)
ஈரோடு: சமூக வலைத்தளங்களை (முகநூல், இன்ஸ்டாகிராம்) பயன்படுத்தி வருபவர்களைக் குறிவைத்து சைபர் மோசடி கும்பல் குற்றச்செயல்களை மேற்கொள்வதாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி, மோசடி கும்பல்கள் பலர் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, ஆபாச காட்சிகளை காண்பித்து அவர்களை வலையில் சிக்கவைத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கூறியுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை பின்வருமாறு காணலாம்.
அதாவது, குடும்பப் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் புகைப்படங்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சாதாரணமாகப் பதிவிடும்போது, அந்த புகைப்படங்களை மோசடி கும்பல்கள் பதிவிறக்கம் செய்கின்றன. பின்னர், அவற்றைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் அவர்கள் புகைப்படத்துடன் செல்போன் எண்ணையும் பதிவிடுகின்றனர்.
போலி சேவைகளைக் காண்பித்து பணம் பறிக்கும் முறைகள்:
இளம் பெண்களின் புகைப்படங்களை பார்த்து, அதை உண்மை என நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களிடம் கும்பல் விடுதி அறை கட்டணம், சேவை கட்டணம், பிற இதர கட்டணங்கள் என ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கோருகின்றனர்.
தொடரந்து, பணத்தை அனுப்ப ஸ்கேனர் கியூஆர் குறியீட்டையும் கொடுக்கின்றனர். பணம் செலுத்திய பின், அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தால், அப்படி ஒரு நபரே அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள். அதற்கு பின் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இவர்கள் உணருகின்றனர்.
வீடியோ கால் சேவையாகவும் மோசடி
ஈரோடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி பேட்டி. (ETV Bharat Tamil Nadu)
மேலும், “வீடியோ கால் சேவை” எனும் பெயரில், ஆபாச வீடியோ நேரடி சேவை என்று கூறி, வாட்ஸ்ஆப் வீடியோ காலில் முகத்தைக் காண்பிக்கும்போது அதனை பதிவு செய்கின்றனர். இந்த வீடியோ தரவுகளைப் பயன்படுத்தி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது சமூக வலைத்தள நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
இந்த வகையான மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு ஏற்படும் அவமானத்தை கருத்தில் கொண்டு, காவல்துறையிடம் புகார் செய்ய முடியாமல் மோசடி கும்பல் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இணையதள மோசடி கும்பல் பல்வேறு மாவட்டங்களில் வலை விரித்து செயல்படுகின்றனர்.
காவல்துறையினர் போல நடித்து பணம் பறிக்கும் வட மாநில மோசடிகள்:
இதேபோல், சில வட மாநிலங்களில் இருந்து காவல்துறை உயர் அலுவலர்களைப் போல பேசி, பேச்சின் பின்னணியில் காவல் நிலையத்தின் வாக்கி-டாக்கி சப்தம் ஒலிக்கவிட்டு குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறி, அவர்கள் பாலியல் தொழில், போதைப் பொருள், திருட்டு, கடத்தல், கொலை போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
பாதிக்கப்படும் நபர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
இந்த பிரச்சினைகளில் சிக்கும் நபர்கள் முதலில் பதற்றமடையாமல், சைபர் குற்ற காவல்துறையினரை www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது 1930 எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் செய்ய வேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் பயம் கொள்ளாமல் புகார் தெரிவித்தால், மோசடி கும்பலை பிடித்து தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற மோசடிகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும், சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கை செலுத்தவும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.