சென்னை:இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகள் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்கக்கோரி, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 காந்தியார் கொலை செய்யப்பட்ட நாள். அந்நாள் ஈகியர் (தியாகிகள்) நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த ஈகியர்களையும் (தியாகிகளையும்), விடுதலைக்குப் பிறகு இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட காந்தியாரையும் அந்நாளில் நாம் நினைவுகூர்ந்து வருகிறோம்.
எந்தக் கருத்தியல் காந்தியாரைக் கொலை செய்ததோ, அந்தக் கருத்தியல் தற்போது நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. காந்தியாரின் போராட்டம் சமூக நல்லிணக்கத்திற்கானது, அரசியலில் மதச்சார்பின்மைக்கானது, மதவெறிக்கு எதிரானது.
1948 ஜனவரி 13 ஆம் தேதி டெல்லியில் நடந்து வந்த மதக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவர காந்தியார் சாகும்வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினார். ஜனவரி 17 அன்று அபுல்கலாம் அசாத்திடம் பட்டினிப் போராட்டத்தை முடிப்பதற்கு அவர் முன்வைத்த கோரிக்கைகளில், டெல்லியில் கோயில்களாகவும், வீடுகளாகவும் மாற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் மீட்கப்பட்டு முந்தைய பயன்பாட்டுக்கு விடப்பட வேண்டும் என்பதாகும்.
ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற காந்தியாரின் பட்டினிப் போராட்டத்தில் டெல்லியில் உள்ள 2 லட்சம் பேர் உறுதிமொழியில் ஒப்பமிட்டனர். "டெல்லியைச் சேர்ந்த இந்து, சீக்கிய, கிறித்துவ, ஏனைய குடிமக்களாகிய நாங்கள், அமைதியாக, பாதுகாப்பாக, தன்மானத்துடன் டெல்லியில் வாழவும், இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும், இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமியக் குடிமக்களுக்கு, நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும்" என்ற உறுதிப்பாட்டை அறிவித்தனர்.
ஜனவரி 18 அன்று அனைத்து சமயத் தலைவர்கள் அளித்த உறுதிப் பத்திரத்தின் அடிப்படையில், காந்தியார் பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஜனவரி 30 அன்று அவர் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
மசூதிகளை இடித்துக் கோயில்கள் கட்டப்படும் அரசியல் நடந்துவரும் இக்காலப்பகுதியில், காந்தியார் கடைசியாக மேற்கொண்ட பட்டினிப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் கருதிப் பார்க்கத்தக்கன. இத்தகைய சூழ் நிலையில், காந்தியார் கொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாகக் கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்ய வேண்டும்.
மேலும், இந்த உறுதிமொழியை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு வழிவகுக்க வேண்டும் என தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!