மதுரை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய, மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.
அதன் பின்னர் காந்திமதி, காயத்ரியை சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக குழந்தையின் பாலின அறிதல் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, காயத்ரி மூன்றாவது முறையும் பெண் குழந்தை கருவுற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, காந்திமதி தனது வீட்டிலேயே காயத்திரிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட காயத்ரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தான் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.