மதுரை:மத்திய சுரங்க துறையால் அறிவிக்கப்பட்டுள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மேலூர் பகுதி மக்கள், கடந்த ஆண்டு நவம்பர் 7 அன்று முதல், தங்களது பகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
ஜனவரி 7 ஆம் தேதி நடைபேரணியை அடுத்து மேலூர் பகுதி அம்பலகாரர்கள் 8 பேர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்கத் ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23 தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனை வரவேற்று அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. வெடி வெடித்து, இனிப்புக்களை வழங்கி,ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு. மேலூர் பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று கிராம சுபைக் கூட்டம் நடைபெற்றது. இவற்றில் மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. மேலூர் பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசுக்கும், போராட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இத்திட்டத்தை எதிர்த்து நின்ற மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து குரலெழுப்பிய நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி.
2. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட போராட்டத்தில் பங்காற்றிய கிராம பொதுமக்கள், பெண்கள், உழவர்கள், தொழிலார்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், சூழலியர் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அனைவருக்கும் நன்றி என்ற உள்ளடக்கதை மையமாக வைத்து 2 தீர்மானங்களை நிறைவேற்றுமாறு போராட்ட களத்தில் தொடர்ச்சியாக செயலாற்றி வந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான பரப்புரை செய்யப்பட்டது.