சென்னை:2 நாள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அரசினர் தனித்தீர்மானத்தை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தீர்மானத்தை வாசித்த அவர், " மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில்டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இத்தகைய உரிமங்களை மாநில அரசுகளின் ஒப்புதல் இன்றி ஏலம் விடக் கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பல்லுயிர் பெருக்கத் தலமாக 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது." என கூறினார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்திருப்பதை தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை மத்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் துரைமுருகன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எனவே இந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.வான வேல்முருகன், இப்பகுதியில் உள்ள மாங்குளம் கல்வெட்டுதான் தமிழ்ச் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கான வரலாற்று ஆவணமாக இருந்துள்ளது என குறிப்பிட்டார்.