நாகப்பட்டினம்:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு வகைகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களிலும் முழு நேர நியாய விலைக் கடை, பகுதி நேர நியாய விலைக் கடை என மொத்தம் 432 நியாய விலைக் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலைக் கடைகளில் பருப்பு இருப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பருப்பு இருப்பு இல்லை, அடுத்த வாரம் வந்துவிடும், அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கடை ஊழியர்கள் கூறுகின்றனர், கடந்த மாதமும் இதே போல் தான் கூறி அலைக்கழித்தார்கள். இதே போல் தான் மண்ணெண்ணெய் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது” என குற்றம் சாட்டுகின்றனர்.