நீலகிரி:நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரங்களில் கால் நடை மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள், மற்றும் விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் யாரும் ஆற்றங்கரையில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பிதர்காடு பகுதியில் நேற்று நான்கு மாணவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். பின்னர் நான்கு மாணவர்கள் ஆற்றில் குளித்துள்ளனர். இதில் குணசேகரன் (17) கவியரசன் (17) ஆகிய இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து உடன் இருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இறங்கி குணசேகரனின் உடலை மீட்டனர். ஆனால் கவியரசனின் உடல் கிடைக்கவில்லை.