தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசி சேல்ஸ் எப்படி இருக்கு? - பட்டாசு தொழில் நிலைமை இதுதான்..!

சிவகாசியில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நடப்பு ஆண்டில் பட்டாசுகள் உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

சிவகாசி பட்டாசு
சிவகாசி பட்டாசு தொடர்பான படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

விருதுநகர்:தீபாவளி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தீபாவளி பட்டாசுகள் தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும், சிவகாசி பட்டாசுக்கு இந்தியா முழுவதும் தனி மதிப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்களை வண்ணமயமாக்குவது சிவகாசி பட்டாசுகள் தான்.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வடக்குப்பகுதி கிராமங்கள் முழுவதும் "கந்தக பூமி" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மண்ணில் இயல்பாக காணப்படும் தனிமங்களால் இப்பகுதி வெப்பமான பகுதியாக உள்ளது. மேலும் வாழ்வாதாரமான நதிகள் இல்லாத நிலையில் பெய்யும் மழையை நம்பியே இந்நிலங்களில் விவசாயம் நடக்கிறது.

விவசாயத்தை நம்பி பெரிதும் பலன் இல்லாத நிலையில், 1940களில் தான் சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகள் அறிமுகமாகின. கொல்கத்தா போன்ற பகுதிகளில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டு வந்தவர்கள் இங்கு சிறிய ஆலைகளை தொடங்கியதாகவும், பின்னாட்களில் இவை பட்டாசு ஆலைகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

பாட்டாசு செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இன்றைய தேதியில் இந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி, இப்பகுதி மக்களின் சுறுசுறுப்பான உழைப்புக்கு பெயர் போனது. அந்தவகையில், நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்திற்கு மேல் சிவகாசியில் தயாராகின்றன. இதற்காக சிவகாசியில் நிரந்தர உரிமம் பெற்ற மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தொடக்க காலத்தில் கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், சாட்டை என சிறிய ரக பட்டாசுகள் தான் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், தற்போது இரவில் பல வண்ணங்களில் ஒளிரும் வாண வேடிக்கை காட்டும் பேன்சி ரக பட்டாசுகள் தான் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில் வடமாநில பண்டிகை மற்றும் திருவிழாக்களை குறி வைத்து பட்டாசு உற்பத்தி நடைபெறும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி சீசன் விற்பனைக்காக பிரத்தியேக பட்டாசுகளை உற்பத்தி செய்யப்படுவதுடன், தீபாவளி பண்டிகைக்காக பேன்சி ரக பட்டாசுகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும். சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடைபெறும் பட்டாசு தொழில், நடைபெறும் நிலையில் நடப்பு ஆண்டில் 20 சதவீதம் வரை உற்பத்தியும் குறைந்து விற்பனையும் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

பாட்டாசு செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லியில் பட்டாசு வெடிவெடிப்பதற்கு தடை:அதே போல் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு தீபாவளிக்கு வெடிவெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசு:சாதாரண பட்டாசை விட பசுமை பட்டாசு சுற்றுச்சூழலை குறைந்தளவு மாசுபடுத்தும். பசுமை பட்டாசை Counsil of Scientific and Industrial Research- National Environment engineered Institute பரிந்துரைக்கிறது. இந்த வகை பட்டாசுகளில் லித்தியம், ஆர்சனிக், பேரியம், கந்தகம் போன்ற கடுமையான உலோகங்கங்கள் இருக்காது. இதனால் தான் டெல்லி, மேற்கு வங்கம் கர்நாடக் உள்ளிட்ட மாநிலங்களில் ரசாயனங்கல் மிகுந்த பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சாதாரண பட்டாசுகள் 160 டெசிபல் சத்தத்தை ஏற்படுத்தும் என்றாக் பசுமை பட்டாசு 110 டெசிபல் அளவிலான சத்தமே ஏற்படுத்தும்.

பட்டாசு உற்பத்தியாளர் டேனியல் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

வருடம் முழுவதும் ஆய்வில் ஈடுபட வேண்டும்:இது குறித்து பட்டாசு உற்பத்தியாளர் டேனியல் என்பவர் கூறுகையில், "இந்த ஆண்டு அக்டோபர் இறுதியிலேயே தீபாவளி வந்த நிலையில், கடந்த மாத இறுதியிலேயே அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தினசரி பட்டாசு ஆலைகளுக்கு சோதனை சென்றனர். விதிமீறல் என்ற பெயரில் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மீண்டும் உரிமத்தை புதுப்பிக்க 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

இதனால், அடுத்த ஆண்டு உற்பத்தி பாதிக்கப்படும். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட ஆலைகள் இம்மாத தொடக்கத்திலேயே மூடப்பட்டதாலும், தொடர் மழை பெய்ததாலும் மக்கள் அதிகம் விரும்பும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

மேலும், சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இரவில் வெடிக்கும் பேன்சி ரக பட்டாசுகள், சிறுவர்களுக்கான கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் மற்றும் பெண்சில் ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, விற்பனையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது" என்று வருத்தம் தெரிவித்தார்.

பாட்டாசு செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

1 கோடி தொழிலாளர்கள்:இந்த ஆண்டு பட்டாசு விற்பனை குறித்து பட்டாசு விற்பனையாளர் சங்கத் துணைத் தலைவர் ராஜேஷ் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்ததுமே எங்களுக்கு பட்டாசுகளுக்கான ஆடர் வந்துவிடும். அப்படி தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி அடுத்த தீபாவளி வரையிலும் ஸ்டாக் வைத்து விற்பனை செய்யும் நேரத்தில் கடந்த ஆண்டு தடைவிதிக்கப்பட்டதால் விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் பட்டாசுக்கு தடையேதும் விதிக்கவில்லை என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல வரும் ஆண்டுகளிலும் பட்டாசு விற்பனை தங்குதடையின்று நடைபெற வேண்டும். சிவகாசியில் பட்டாசு தொழிலை மட்டும் நம்பி நேர்முகம் மற்றும் மறைமுகமாக 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த தொழிலை சார்ந்த 1 கோடி பேர் உள்ளனர். இந்த வருடம் விபத்தில்லா தீபாவளியை அனவரும் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.

பாட்டாசு செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

பொதுவாகவே குடிசைத்தொழில் போல நடைபெறும் பட்டாசு உற்பத்தி, பல ஆலைகளை ஒருங்கிணைத்தே செயல்படுகிறது. ஒரு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தாலும் மற்ற ஆலைகளுக்கான மூலப்பொருட்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டு பட்டாசு உற்பத்தி தடைபடும். இதனால் அதிகாரிகள் பட்டாசு ஆலைகள் மீதான ஆய்வை வருடம் முழுவதும் நடத்த வேண்டும் எனவும், தீபாவளி சீசனில் மட்டும் ஆய்வு நடத்தி சீல் வைப்பதால் கணிக்க முடியாத சூழல் தொழிலில் நிலவுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

பாட்டாசு செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வியாபாரிகளின் இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசிய போது, சிவகாசியில் மொத்தம் 1080 ஆலைகள் செயல்பாட்டில் உள்ளதாகக் கூறுகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை 125 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு விதிகளை மீறியதற்காக உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறீனர். கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 63 பட்டாசு ஆலை விபத்துக்களில் 148 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டில் மட்டும் 12 விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலைகளில் சிறு தவறு நேர்ந்தாலும் விளைவு மோசமாக இருக்கும் என குறிப்பிடும் அதிகாரிகள், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் ஆலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details