மதுரை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறித்த கருத்துகள் தீர்ப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியிலிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஆர். சுப்ரமணியன் உத்தரவிட்டுள்றார்.
அண்மையில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக நடந்து கொண்டதாக சக வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கருத்துக்கு எதிராக அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில், கர்நாடக பார்கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில்,"நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாக நடத்துகிறார். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும்,"என கூறியிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், "வழக்கிலிருந்து தனி நீதிபதியை விலகுமாறு கேட்கவில்லை, மூத்த வழக்கறிஞர் மீதான கருத்துக்களை நீக்க வேண்டும், நீதிமன்ற விசாரணை காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்,"என குறிப்பிட்டிருந்தது.