கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளசாராய விற்பனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து வாந்தி, கண் எரிச்சல், வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையம், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு அவர்களது வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே ஊரில் வெவ்வேறு தெருக்களைச் சார்ந்தவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒரே இடத்தில் தகனமும் நல்லடக்கமும் செய்தது. ஊர் முழுவதும் எங்கு திரும்பினாலும் உயிரிழந்தவர்களைப் பார்த்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கையில், உயிரிழந்த இந்திரா குப்பனின் (வயது 48) மூத்த மகள் கோமதி என்பவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் வராமல் உடலை எடுக்கக்கூடாது என இந்திராவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.