தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் நள்ளிரவில் மீன் வியாபாரி கொலை.. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்! - fish seller Murder in thoothukudi - FISH SELLER MURDER IN THOOTHUKUDI

Thoothukudi Fish Seller Murder: தூத்துக்குடி மீன் வியாபாரி உட்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தீடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலைமறியல் போராட்டத்தில் வெள்ளத்துரையின் உறவினர்கள்
சாலைமறியல் போராட்டத்தில் வெள்ளத்துரையின் உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 5:34 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை நடத்தி வந்துள்ளார். இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போது, அவரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்துரையின் உறவினர்கள் குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பாக இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆய்வாளர் சுகாதேவி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கோவில்பட்டியில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை - நள்ளிரவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! - Fish Seller Murder In Thoothukudi

ABOUT THE AUTHOR

...view details