தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போலீஸ் வர சொன்னதா கிளம்புனாரு'.. திருச்சி ரவுடி என்கவுண்டர் திட்டமிட்டதென உறவினர்கள் குற்றச்சாட்டு..! - trichy rowdy encounter - TRICHY ROWDY ENCOUNTER

Trichy rowdy Duraisamy Encounter: புதுக்கோட்டையில் நடந்த ரவுடி துரையின் என்கவுண்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீசார் மீது அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரவுடி துரைசாமி மற்றும் உறவினர்கள்
ரவுடி துரைசாமி மற்றும் உறவினர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 3:39 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவரங்குளம் வனப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்பவர் கூட்டாளிகளுடன் வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, கத்தியால் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த இடத்திலேயே ரவுடி துரை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி மனோகரன், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தீதா பாண்டே உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த ரவுடி துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ரவுடி துரைசாமி காவலரை அரிவாளால் வெட்டியதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், அது முற்றிலும் தவறானது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, சம்பவத்தன்று காலை 5 மணிக்கு காவல்துறையினர் கோவைக்கு வரச் சொன்னதாக கிளம்பிய துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டதாக மதியம் தகவல் கிடைத்ததாகவும், போலீசார் திட்டமிட்டு இந்த என்கவுண்டரை செய்துள்ளதாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்புப் பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், துரையின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரையின் மரணத்திற்கு நீதி கேட்டும், துரைசாமியின் என்கவுண்டரின் போது துரைசாமியின் உடன் இருந்த அவரது அக்கா மகன் பிரதீப் குமாரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பிரபல தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை; மதுரையில் பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details