ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கடந்த அக். 24ஆம் தேதியன்று பள்ளி கழிவறையில் ஆபாச வார்த்தை எழுதியதாக கூறி 15 மாணவர்களை பள்ளி தனி அறையில் அடைத்து வைத்து அடித்ததாகவும், தகாத வார்த்தையில் பேசியதாகவும் பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபாச வார்த்தை எழுதியதாக கூறிய 15 மாணவர்களில், ஒரு மாணவரை மட்டும் தான் செய்த குற்றத்தை ஒத்துக்கொள்ளும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தாகவும், இதனால் அந்த மாணவன் கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த மாணவரை, பள்ளிக்கு வரும்படி கல்வி நிர்வாகம் அழைத்துள்ளது. அதன் பேரில் பள்ளி சென்ற மாணவனை பிரேயர் ஹால் முன் தான் தவறு செய்தது உண்மைதான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கடிதம் ஒன்று எழுத வேண்டும் என மாணவரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பல்லடம் மூவர் படுகொலை வழக்கு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர அதிமுக எம்.எல்.ஏ கடிதம்..
இதனை ஏற்க மறுத்த மாணவன், நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரும், ஊர் பொதுமக்களும் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தாளாளர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் இதுபோன்று சம்பவங்கள் இனி நடக்காது என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பள்ளியிலிருந்து பெற்றோரும் பொதுமக்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.