கோயம்புத்தூர்: கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற ராஜா (42). இவரது மனைவி சுகன்யா. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜா நேற்று (மே 27) அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாக மருத்துவமனை காவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரைப் பிடித்து அடித்தாக கூறப்படுகிறது.
அதில் அவர் மயக்கமடையவே, அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ராஜாவின் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும், ராஜாவை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பின்னர், இது குறித்து பேசிய ராஜாவின் மனைவி சுகன்யா, "சிகிச்சைக்காக எனது கணவர் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று எனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மூன்று பேர் போலீஸ் என பொய் சொல்லி எங்களது வீட்டிற்கு வந்து விசாரித்து, என்னை புகைப்படம் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற பின்பு தான் கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறினர். வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் MD மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.