மயிலாடுதுறை:கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவமனையை மூடக் கோரியும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கீழவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (48). கூலி வேலை செய்து வந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஆனந்தன் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள், மருத்துவமனையை மூடக் கோரியும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையின் முன்புற கண்ணாடியை கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.