கரூர்:கரூர் அருகே உள்ள விஸ்வநாதபுரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராசு (எ) ராஜேந்திரன்(53). இவர் கரூர் மாவட்ட ஊர்காவல் பணியில் பணியாற்றும் வனிதா என்ற நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், வனிதாவின் உடன்பிறந்த சகோதரியான வாசுகியை 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வனிதா ஊர்காவல் படையில் பணியாற்றுவதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் காசிநாதன்(60) என்பவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த ராசு க.பரமத்தி காவல் நிலையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், வனிதா மீதும் காசிநாதன் மீதும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், க.பரமத்தி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து, வனிதாவை அவரது கணவர் ராசுவுடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், வனிதா மீண்டும் காசிநாதனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ராசு காசிநாதனை அழைத்துக் கண்டித்துள்ளார். இருப்பினும் காசிநாதனும் வனிதாவின் தொடர்பை துண்டிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த ராசு, காசிநாதனை கொல்ல குடும்பத்துடன் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், நேற்றுமுந்தினம் (செப்.1) ராசு, வனிதாவின் மகன் குரு பிரசாத் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரது மகன் மதுமோகன் (எ) சுந்தரபாண்டியன் மூவரும் காசிநாதன் வழக்கமாக இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து ஆண்டாங்கோயில் வழியாக விடுவநாதபுரி நோக்கிச் செல்லும் வழியில் காத்துக் கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில், பெரிய ஆண்டாங்கோயில் அக்ஹரகாரம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டம் அருகே காசிநாதன் வந்த போது 3 பேரும் சேர்ந்து வழிமறித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் மார்புப் பகுதியில் குத்திவிட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காசி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த பொதுமக்கள் காசிநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இதுதொடர்பாக கரூர் நகர காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொறுப்பு ஆய்வாளர் முத்துக்குமார், காசியின் உடலைக் கைப்பற்றி காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக உயிரிழந்த காசிநாதனின் மகன் அஜித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ராசு, குரு பிரசாத், மதுமோகன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர். தற்போது, கரூர் ஊர்காவல் படையில் உள்ள பெண் காவலரிடம் திருமணம் மீறிய உறவு வைத்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகைகளின் பாலியல் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? - பிரபல நடிகை கைக்காட்டுவது இவர்களைதான்!