தூத்துக்குடி: கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன.
கோவில்பட்டியில் கந்து வட்டி தொல்லையால் ரியல் எஸ்டேட் ஓனர் தற்கொலை ஆறுமுகப்பாண்டி தனது தொழில் நிமித்தமாக கொச்சிலாபுரத்தினைச் சேர்ந்த ஜமுனா, கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முக பாண்டி, கணேஷ்குமார், சுப்பிரமணி, ராமமூர்த்தி, முருகன், முத்துக்குமார், பாலசிங்கம், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அரவிந்த், காளி பாண்டி, வைரராஜ், அஜித் உள்ளிட்டவர்களிடம் ரூ.1 கோடியே 34 லட்சம் வரை பணம் கடனாகப் பெற்று மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
அது மட்டுமின்றி, நிலம் தொடர்பாகக் கொடுத்த பைனான்ஸ் தொகையும் வராமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ஆறுமுகப்பாண்டி கொடுத்த இடங்களில் பணம் வரவில்லை என்பதால் வட்டி கொடுக்க முடியாமல் பரிதவித்துள்ளார்.
மேலும், தான் வாங்கிய அசல் பணத்திற்கு மேலாக வட்டி கொடுத்து இருந்த போதிலும் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். தனக்குக் கால அவகாசம் கொடுங்கள் பணத்தினை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று ஆறுமுகப்பாண்டி எவ்வளவு சொல்லியும் கேட்காத கந்து வட்டிக் கும்பல் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்த காரணத்தினால், கந்து வட்டி பிரச்னை தொடர்பாகக் கடந்த 28.08.23 மற்றும் 25.01.2024 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆறுமுகப்பாண்டி புகார் கொடுத்துள்ளார்.
மேலும், தனக்குக் கால அவகாசம் வழங்கினால் அசல் தொகையைக் கொடுத்து விடுகிறேன். வட்டி தர முடியாது என்றும் கேட்டுள்ளார். வழக்கம் போல கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காமல் கட்ட பஞ்சாயத்துப் பேசி அனுப்பி வைத்து விட்டனர். தனக்கு வர வேண்டிய பணம் தொடர்பாகவும், ஆறுமுகப்பாண்டி புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதும், கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது. ஆறுமுகப்பாண்டியை அந்த கும்பல் மிரட்டியது மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர்.
மேலும், வீட்டிலிருந்த பத்திரங்கள், செக் ஆகியவற்றைக் கும்பல் மிரட்டி வாங்கியது மட்டுமின்றி வெற்று பேப்பர்களில் கையெழுத்தும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்நிலையத்தில் புகார் அளித்தும் கந்து வட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
கந்து வட்டிக் கும்பலின் தொந்தரவும் தாங்க முடியவில்லை. தான் கொடுத்த இடத்திலும் பணம் வரவில்லை என்பதால் மனவேதனை அடைந்த ஆறுமுகப்பாண்டி கடந்த 25ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்குச் சிகிச்சைப் பலனின்றி ஆறுமுகப்பாண்டி இன்று(ஜன.29) பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையின் அலட்சியம் காரணமாகவும், கந்து வட்டிக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் தான் ஆறுமுகப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்குக் காரணமான கந்து வட்டிக் கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த ஆறுமுகப்பாண்டியின் உறவினர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி லெட்சுமி மில் மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர்.
இது குறித்து மனைவி சித்ரா கூறுகையில், “தொழிலுக்காகத் தனது கணவர் கடன் வாங்கியதாகவும், அசலை விட வட்டி கொடுத்த பிறகும், கந்து வட்டிக் கும்பல் தொந்தரவு செய்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்பொழுது தன்னையும், தனது குழந்தைகளையும் கந்துவட்டி கும்பல் மிரட்டி வருவது மட்டுமின்றி, பத்திரங்கள், செக் ஆகியவற்றைக் கந்துவட்டி கும்பல் பறித்துக் கொண்டதாகவும், இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கந்து வட்டிக் கும்பல் வீட்டிற்கு வந்து அவதூறாகப் பேசுவது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுவதாகவும், தனக்கும், தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உறவினர் பூசைத்துரை கூறுகையில், “கந்து வட்டிக் கும்பல் குறித்து 6 மாதத்திற்கு முன்பே புகார் கொடுத்தும், காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் ஆறுமுகப்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்றைக்கு அவரது மனைவி, குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்பதாகவும், கந்து வட்டிக் கும்பலைக் கைது செய்தால் மட்டுமே ஆறுமுகப்பாண்டி உடலை வாங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர்களைத் தவிர, வேறு சில கந்து வட்டிக்குக் கொடுத்தவர்கள், அவருடைய வீட்டுப் பத்திரங்கள், வீட்டுத் தீர்வை ரசீது மற்றும் மனைவி, குழந்தைகள் அணிந்து இருந்த நகைகளையும் மிரட்டிப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆறுமுகப்பாண்டியிடம் இருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு கும்பல் தொடர்ந்து அவரையும், அவரது குடும்பத்தையும் மிரட்டியுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்களும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி கந்து வட்டிக் கும்பல்களுக்கு ஆதரவாகக் கட்ட பஞ்சாயத்து செய்த காரணத்தினால் மனமுடைந்த ஆறுமுகப்பாண்டி தற்கொலை செய்து கொண்டது கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஈரோட்டில் தனியார் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒரு மாணவி பலி; 40 பேர் காயம்!