ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில், பொங்கல் போனஸ் தருவதில் குளறுபடி நடப்பதாக, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி, இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசுகையில், “வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் தனி அதிகாரிகள் பொறுப்பு வகிக்கும்போது, ஒரு லிட்டர் பாலுக்கு ஒரு ரூபாய் 25 பைசா போனசாக வழங்கினர்.
இப்போது வெறும் 80 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் ஏதோ தில்லு முல்லு நடக்கிறது. அரசியல் தலையீடும் இருப்பதாகத் தெரிகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சில கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் தரவே இல்லை. மாவட்டம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார்.