ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மு.தூரி கிராமம் உள்ளது. இங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ இருளப்பசாமி, ஸ்ரீ கருப்பணசாமி கோயில் ஆனி மாத பொங்கல் விழா, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், தினந்தோறும் விநாயகர், இருளப்பசாமி, கருப்பணசாமி, காளியம்மன் ஆகிய கிராம பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து வந்தது.
புரவி எடுப்பு திருவிழா (CREDITS- ETV Bharat Tamil Nadu) இதைத்தொடர்ந்து, இந்த விழாவின் முக்கிய அங்கமான 'புரவி எடுப்பு திருவிழா' இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த புரவி எடுப்பு திருவிழா என்பது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைந்த தானியங்களைக் கடவுளுக்குப் படைத்துக் கொண்டாடுவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த திருவிழா மூலம் விவசாயம் செழிக்க வேண்டும், போதிய பருவமழை பொழிய வேண்டும் எனக் கடவுளிடம் கிராம மக்கள் வேண்டும் விழாவாக பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பக்தர்கள் முதுகுளத்தூரில் இருக்கும் அய்யனார் ஆலயத்தின் குதிரை, கருப்பணசாமி, பைரவர், தவழும் பிள்ளை போன்ற சிலைகளை தலையில் சுமந்து கொண்டு 4 கி.மீ தூரம் நடந்து மு.தூரி கிராமத்தில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு இறக்கி வைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவில் மு.தூரி கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளருக்கு ஏலக்காய் மாலை.. சேர்மன் இருக்கையில் அமர வைத்து கெளரவிப்பு!