சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் வந்து தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி 35 மீனவர்களையும் கைது செய்து அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அக்கா மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடலோர ரோந்து கப்பல் வந்து விசைப்படகையும் சுற்றி வளைத்து 6 மீனவர்களையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர். அவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதங்கள் எழுதினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.