தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்! - Ramadoss about school reopening - RAMADOSS ABOUT SCHOOL REOPENING

Ramadoss about school reopening: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ramadoss and school students Image
ராமதாஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 3:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 21ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும்.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனை ஏற்று பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7ஆம் தேதிக்கும், பின்னர் ஜூன் 14ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிகக் கடுமையான வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்

கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணுக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் முக்கிய கருத்து! - TNPSC Group 4 Tamil Paper

ABOUT THE AUTHOR

...view details