தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப் பழமையான வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மூலவர் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் சீதா தேவியுடன் காட்சியளிக்கிறார்.
தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா 11 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ராமநவமி விழா கொடியேற்றத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநவமி பெருவிழாவின் தொடக்கமாக, இன்று உற்சவர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். இதனையடுத்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.