ராமநாதபுரம்:தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருவது மண்டபம் பகுதியையும் ராமேஸ்வர தீவையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம். 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம் இன்று வரை பிரதான சின்னமாக மட்டுமல்லாமல், மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக ரூ.545 கோடி செலவில், அதிநவீன கட்டமைப்புகளைக் கொண்டு புதிய ரயில் பாலத்தை அமைக்கும் பணி தொடங்கி 90 சதவீத பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன.
இப்புதிய ரயில் பாலத்தின் நீளம் 2.08 கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் 333 தூண்கள், கடலுக்கு அடியில் 36 மீட்டர் ஆழத்தில் இருந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாது, கப்பல் செல்லும்போது பழைய பாம்பன் ரயில் பாலம் கதவு போல இரண்டாக திறந்து வழிவிடப்படும். ஆனால், புதிய பாம்பன் ரயில் பாலம் லிப்ட் போன்று மேலே எழும்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிப்ட் வடிவிலான ரயில் தடம் மட்டும் 640 டன் எடை கொண்டதாகவும். இது 17 மீட்டர் வரை உயர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, பழைய பாம்பன் பாலத்தில் 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் பயணம் செய்ய முடியும். இதன் காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் வரை பயணம் செய்தால் மட்டுமே இந்த பாலத்தை கடக்க இயலும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் 80 கி.மீ வேகம் வரை பயணம் செய்ய முடியும். இதனால் 2ல் இருந்து 3 நிமிடங்களுக்குள்ளாகவே பாலத்தைக் கடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால், நேற்று (ஜூலை 11) புதிய பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் நிறைவடைந்து புதிய ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும். பாம்பன் ரயில் தூக்கு பாலம் மிகவும் பழமையானது என்பதால், அதன் உறுதித்தன்மை குறைந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் புதிய ரயில் பாலம் தூக்கப்படும்போதும் பழைய பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது. ஆகவே, பழைய ரயில் தூக்குப் பாலத்தை அகற்றி, அதனை காட்சிப்படுத்துவது குறித்து ரயில்வே துறை சார்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று அனில் குமார் கண்டேல்வால் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"போலீசார் திட்டமிட்டு என்கவுண்டர்" - ரவுடி துரையின் சகோதரி பகீர் புகார்.. பின்னணி என்ன?