மதுரை:மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆக.15) தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ரயில் ஆர்வலர்கள் மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4ஆவது நடைமேடையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பாக ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரிந்த மற்றும் பணிபுரிகின்ற தொழில்நுட்ப பணியாளர்களை ரயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பிற ரயில்களோடு ஒப்பிடுகையில் இந்த ரயிலின் பயணக் கட்டணம் மிக மிகக் குறைவாகும்.
மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு 7.25 மணி நேரத்தில் மதுரையை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரயில் என்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு 7.50 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் படிப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலேயே பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சென்னை - மதுரை மின்மயமாக்கம் காரணமாக 10 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டன.
2018ஆம் ஆண்டு மதுரை - சென்னை மார்க்கத்தில் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதன் முதலாக வைகை எக்ஸ்பிரஸ்சில் தரமான அதே நேரம் எடை குறைந்த எல்.ஹெச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு மேலும் பயண நேரத்தில் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.