திருநெல்வேலி: தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், "இந்த மண்ணின் விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராடும்போது எனது உறவுகள் போராடுவது போன்று எனக்கு உள்ளது. ஒருபுறம் பெரியார் உருவாக்கிய சமூக நீதி, சமத்துவம் மற்றும் மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக போன்றோரின் வெறுப்பு என்று இன்றைக்கு இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான தத்துவ போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்று நரேந்திர மோடி சொல்லுகிறார். இந்தியாவில் உள்ள எந்த மொழிக்கும் குறைவானது அல்ல தமிழ் மொழி. பல்வேறு மொழிகள்,பண்பாடுகள் மற்றும் கலாச்சாரம் உள்ளது. ஆனால் எந்தவிதத்திலும், ஒன்றுக்கொன்று தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழி அல்ல தமிழர்களின் வாழ்க்கைமுறை. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதல் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆகும்.
பிரிட்டிசார் ஆட்சி செய்தபோது இருந்த இந்தியாவைவிட, தற்போது உள்ள இந்தியா சமச்சீர் அற்ற இந்தியாவாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெறும் பணக்காரர்கள் 70 சதவிகித மக்களின் செல்வத்தை தங்களுடைய கைவசம் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனாலும், பிரதமர் அவர்களது கடன்களைத் தள்ளுபடி செய்யத் தயாராக இல்லை. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாத பிரதமர், இந்தியாவில் உள்ள பெறும் பணக்காரர்களின் கடன் தொகையான 16 லட்சம் கோடி ரூபாய்க் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
நாட்டில் உள்ள வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என அனைத்தும் அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று பாஜக எம்.பி கூறுகிறார். உலகம் முழுவதும் இந்தியாவை ஜனநாயகத்தின் நாடு என்று போற்றிய காலங்கள் மறைந்து, தற்போது ஜனநாயகம் அழிந்துவரும் நாடாகப் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வேலையில்லா திண்டாட்டம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசில் உள்ள 30 லட்சம் காலி பணியிடங்களை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிரப்பப்படும். வேலைவாய்ப்பு இன்மையைப் போக்கத் தனிச்சட்டம் இயற்றப்படும்.
தமிழக மக்களுக்கு நீட் தேர்வு ஒரு பெரிய பிரச்சனை. ஆகவே இந்தியா கூட்டணியைப் பெருத்தவரையில் நீட் தேர்வு குறித்த முடிவுகள் எடுக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கே கொடுக்கப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. ஆகவே, அதன் முடிவுகளை மக்களாகிய நீங்களே எடுப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அதேபோல, ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது இல்லை. ஆகவே, இந்தியாவில் உள்ள ஏழைப் பெண்களுக்காக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். அந்த வகையில், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது வங்கிக் கணக்கில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் செலுத்தப்படும். மேலும், ஆஷா மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் வருவாயை இரட்டிப்பாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் பிரதமர் மீனவர்களைப் பற்றி யோசிப்பதில்லை. அவர்களை, பிரதமர் முற்றிலும் புறக்கணித்துவிட்டார். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நமது மீனவர்களும் மிக முக்கியமானவர்கள். ஆகையால், மீனவர்களுக்காகத் தனி தேர்தல் அறிகையை உருவாக்கியுள்ளோம். அதன் அடிப்படையில், அவர்களது படகுகளுக்கான எரிபொருள் மானியம், காப்பீடு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை வழங்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"ஜி பே' ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க" - பிரதமர் மோடி படத்துடன் கூடிய போஸ்டர் வைரல்!