விழுப்புரம்:விழுப்புரம் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே அமைந்துள்ள டிஎன்சிஎஸ்சி குடோன், நியாய விலைக்கடை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வினைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனைத்து பகுதிக்கான ரேஷன் கடைகளும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,854 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு இருந்துள்ளது. இந்த மாதத்தில் இருந்து அதுவும் சீராக தரப்பட்டுள்ளது. துவரம் பருப்பு அடுத்த மாதத்திற்குள் மீண்டும் அனைவருக்கும் வழங்கப்படும். விவசாயக் கடன் கடந்த ஆண்டு மட்டும் ரூ.650 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் அரிசி, சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை. கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளோம். பாமாயில் குறித்து பார்த்தால், 2.9 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் தற்போது பாமாயில் உள்ளது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.