விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுப் பந்தலில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்காக மாநாட்டு திடலின் பல்வேறு பகுதிகளில் கியூ.ஆர் கோடு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்வது எப்படி?
- முதலில் மாநாட்டு திடலில் உள்ள கியூ.ஆர் கோடு புகைப்படத்தை மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் தவெகவின் பிரத்யேக பக்கத்திற்கு லிங்க் செல்கிறது.
- அதில் "வணக்கம் தோழரே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பின்னர் நம்முடைய 10 இலக்க மொபைல் எண்ணும் கேட்கப்படுகிறது. அதனை உள்ளீடு செய்தால் 6 இலக்க OTP வரும். அதை சரியாக பதிவு செய்தவுடன் நமது மொபைல் போனின் லொகேஷனை ஆன் செய்யுமாறு கேட்கிறது.
- அதையும் ஆன் செய்து விட்டால் நம்முடைய இடத்தை சரியாக கண்டறிந்து விடுகின்றனர். பின்னர் பெயர், புகைப்படம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- இவற்றை உள்ளீடு செய்தால் நம்முடைய இடத்தை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறது. அனைத்தும் சரியாக இருந்தால் மாநாட்டில் பங்கேற்றதற்கான சான்றிதழ் கிடைத்து விடுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்தால் மட்டுமே பங்கேற்றதாக எடுத்து கொள்கிறது. இல்லையெனில் சான்றிதழ் வழங்கப்படாது என மெசேஜ் வருகிறது. அதே போல் மாநாட்டு கொள்கை அறிக்கையையும் இந்த கியூ.ஆர் கோடு மூலமே பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு:இந்த கியூ.ஆர் கோடு சிலர் ஸ்கோன் செய்தாலும் தவெகவின் பிரத்யேக பக்கத்திற்கு செல்ல முடியவில்லை சஎன தெரிவிக்கின்றனர். பலர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முயல்வதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.