திருநெல்வேலி:நெல்லையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்திவரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்துக்கு சிங்கம்பட்டி ஜமீன் கொடுத்த 99 ஆண்டு குத்தகை காலம் 2028ஆம் ஆண்டு முடிவடைய உள்ளதால், முன்கூட்டியே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது.
மேலும், அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், சுமார் 4 தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்த தொழிலாளர்கள், மாஞ்சோலை பகுதியை விட்டு கீழே இறங்க மனம் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியிலே தொடர்ந்து வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலைக்குச் சென்று தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதை அறிந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (ஜூலை 01) தொழிலாளர்களை சந்திக்க மாஞ்சோலை சென்றார்.