தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கேட்டு மிரட்டிய புதுப்பட்டினம் காவலர் சஸ்பெண்ட்; பைக் மோதிய விபத்தில் பதவியை விட்டது எப்படி?

Pudupattinam police suspend: இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய காவலரின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.

pudupattinam police suspend
காவலர் சஸ்பெண்ட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 12:46 PM IST

காவலர் பேசிய செல்போன் உரையாடல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்தைச் சேர்ந்தவர், சங்கர். இவர் சீர்காழி, சட்டநாதபுரம் பகுதி அருகே உள்ள சாலையோரத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில் பிரதான சாலையில் செல்ல முயன்றுள்ளார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மங்கைமடம் காந்தி நகரைச் சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவர், சங்கர் வாகனத்தில் மோதி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கீழே விழுந்த பிரவீன்ராஜூக்கு முதலுதவி செய்ததுடன், வாகனத்தின் உடைந்த பாகங்களையும் சீர் செய்து கொடுக்க சங்கர் முன்வந்துள்ளார். ஆனால், பிரவீன்ராஜோ அவரது வாகனத்தில் என்னென்ன மாற்ற வேண்டுமோ, அனைத்தையும் சேர்த்து மாற்ற திட்டமிட்டுள்ளார். இதையறிந்த சங்கர், என்னால் வாகனத்திற்கு எவ்வித செலவும் செய்ய முடியாது என்றும், வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்து பார்த்துக் கொள்வோம் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சீர்காழி காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற இவ்விபத்து குறித்து, சீர்காழி போலீசார் விசாராணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் பிரவீன்ராஜ், புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு, விபத்து குறித்து தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தொலைபேசியில் சங்கரைத் தொடர்பு கொண்ட காவலர் பிரபாகரன், பிரவீன்ராஜுக்கு ஆதரவாக உடனடியாக பணம் வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் உன்னை கைது செய்யச் சொல்லி சீர்காழி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார் எனவும், எனக்கு ஏடிஎஸ்பி வரை லிங்க் உள்ளது எனவும், இது போன்ற விபத்தில் ஏற்கனவே 1 லட்சம் வரை பணம் பெற்று கொடுத்துள்ளதாகவும், ஆகையால் உடனடியாக பணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார்.

மேலும், 5 ஆயிரம் ரூபாய்க்கு இருசக்கர வாகனத்தின் உதிரிபாகம் வாங்கியதற்கான ரசீதை அனுப்பி வைத்ததுடன், தொடர்ந்து பணம் அனுப்பச் சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது தவித்த சங்கர், ஒரு கட்டத்திற்குமேல் காவலர் பிரபாகரன் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த ஆடியோவை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, உயர் அதிகாரிகளின் பெயரைத் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காகவும், மிரட்டி பணம் பறிக்க முயன்ற குற்றத்திற்காகவும் பிரபாகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உதகை மண்சரிவு சம்பவம்; விதியை மீறி கட்டடங்கள் கட்டுவதாலே உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details