புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு, பெரியார் நகர், நரிமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று (நவம்பர்.22) வெள்ளிகிழமை நடைபெற்றது. இந்த விழாவானது மாமன்ற உறுப்பினர் பழனிவேலின் தலைமையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பாக நரிமேடு நாகம்மாள் கோயிலில் இருந்து பழங்கள், பிஸ்கட், சாக்லேட், மரக்கன்றுகள் என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகள், இஸ்லாமியர்கள் படிக்கும் குரான் நூல், பள்ளிவாசல் அஜரத்திற்கு புத்தாடைகள் கொண்ட தட்டுகளை சீர்வரிசையாக கொடுத்தனர். இந்த சீர்வரிசை தட்டுக்களை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், திமுக நகரக் கழகச் செயலாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று இணைந்து ஊர்வலமாக சென்று, புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்று சீர்வரிசை தட்டுகளை வாங்கிச் சிறப்பு தொழுகையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் பொது மக்கள் சார்பில் பள்ளிவாசல் அஜரதிற்கும், நிர்வாகிகளுக்கும் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.