புதுச்சேரி: புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. இதில் புதுச்சேரியில் ஒரு அரசுப் பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்நிலையில், அரசுப் பள்ளியில் படித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் வடை, பாயாசம், அப்பளம், காரக்குழம்பு சாம்பார் என தலை வாழை இலை விருந்தளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் வளர வேண்டும் என்பது பலரது ஆர்வமாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு படி மேலாகச் சென்று மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அதாவது புதுச்சேரி திருபுவனை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், திருபுவனை காவல் நிலையத்திற்கு அழைத்த உதவி ஆய்வாளர் இளங்கோ, பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கௌரவப்படுத்தினார்.