தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம்" - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி! - Former CM Narayanasamy - FORMER CM NARAYANASAMY

Former CM Narayanasamy: யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புகைப்படம்
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 10:35 PM IST

புதுச்சேரி: பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைப் பேசி வருகிறார். பிரதமர் என்ற நிலையில் இருந்து இறங்கி வந்து காங்கிரஸ் கட்சியைத் தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, "தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார். ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். பிரதமர் என்ற நிலையிலிருந்து தடுமாறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளைப் பற்றிப் பேசாமல், புலம்பி வருகிறார். தினமும் தன் நிலையிலிருந்து மாறி, மாறி பேசி தடம் புரண்டு வருகிறார்.

நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 7 கட்ட தேர்தல் முடியும் நிலையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். யார் பிரதமர் என்பதை இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார். மோடி மீதான எதிர்ப்பு அலை, பா.ஜ.க வேட்பாளரின் செயல்பாடு ஆகியவற்றின் மீதான அதிருப்தியால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி 3 ஆண்டு முடிந்து 4ம் ஆண்டை தொடங்கியுள்ளது. இந்த ஆட்சிக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண்தான் அளிக்க முடியும். எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. தேர்தலில்கூட முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேசவில்லை.

மாநில அரசு அளித்த வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப் படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சி மக்களை வஞ்சித்துள்ளது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடக்கி வைத்துள்ளது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினோம்.

இந்த திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிதி கருவூலத்தில் உள்ளது. இதை திட்டமிட்டு மாணவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கக் காங்கிரஸ் அமைச்சரவையில் முடிவெடுத்தோம். இந்த திட்டத்தையும் அரசு கிடப்பில் போட்டுள்ளது.

நீட் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தற்போது நீட் தேர்வு மூலம்தான் நர்சிங் மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதை புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்” என்று நாராயணசாமி கூறினார்.

இதையும் படிங்க:காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 9 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - Sivakasi Cracker Factory Explosion

ABOUT THE AUTHOR

...view details