புதுச்சேரி:நாடாளுமன்றத் தேர்தல் மொத்தமாக 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன. இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில், புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, திமுக மாநில அமைப்பாளர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதில், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தொண்டர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது, “ஜனநாயகத்தை முழுமையாக அழித்து குழி தோண்டி புதைத்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. நாட்டை காக்க வேண்டும் என்றால், பாஜக இருக்கக்கூடாது. மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், தேர்தல் நடக்குமா என்பது தெரியாது. அனைத்து சட்டங்களையும் மாற்றும் மன தைரியமும், பண தைரியமும் அவர்களிடம் உள்ளது. நாட்டை காக்க வேண்டும் என்றால், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்க்க வராத பிரதமர் மோடி, இப்பொழுது மாதத்திற்கு ஒருமுறை இங்கு வருகிறார். சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி என அடிக்கடி வருகிறார். மீண்டும் இரண்டு முறை இங்கு வரப் போகிறார். அதற்கு காரணம் மக்களின் ஓட்டு. இந்தியாவை அவர்கள் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக அதனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஏற்றுக்கொள்ளாது. இந்தியா முழுவதும் துடைத்து எரிய வேண்டிய கட்சி பாஜக” என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல் 2024: 18 தொகுதிகளில் நேரடியாக மல்லுக்கட்டும் திமுக - அதிமுக.. முக்கிய புள்ளிகள் யார் யார்? - Admk Vs Dmk Candidates