புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான நிலையில், நான்காவது நாளான நேற்று (மார்ச் 5) அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, விவேகானந்தன் (59), கருணா (19) என்ற இரண்டு நபர்களைக் கைது செய்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்திரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்று, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறு ஆய்விற்குப் பின்பு தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை: இந்த சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி மாநகர் பகுதிகளில் கடற்கரை சாலை காந்தி சிலை, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, ராஜா திரையரங்கு சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு என பல்வேறு இடங்களில் சமூக அமைப்பினர்கள், பல்வேறு கட்சியினர், மாணவ அமைப்பினர், கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், நகரில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
கடலில் இறங்கி போராட்டம்: சிறுமி இறப்புக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராடிய மக்கள், "பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், போதைப்பொருளைத் தடை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிப் போராடி வருகின்றனர். திடீரென ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்.பி கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.