தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புத்தகக் காட்சி; சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து! கிளம்பியது சர்ச்சை... - PUDUCHERRY ANTHEM ISSUE

சென்னை புத்தக காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

சீமான் மற்றும் கட்சி கொடி (கோப்புப்படம்)
சீமான் மற்றும் கட்சி கொடி (கோப்புப்படம்) (Credit - @Seeman4TN X Account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 7:44 PM IST

சென்னை: சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாலமுரளிவர்மன் தொகுத்த 'தமிழ் தேசியம் - ஏன்? எதற்கு? எப்படி?' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலோ, இதர நிகழ்ச்சிகளிலோ தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ தமிழ்தாய் வாழ்த்தான "நீராரும் கடலுடுத்த...." பாடல் பாடப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தான ' வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே.. மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே...' பாடல் பாடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையின் போது, தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தற்போது பாடப்படும் தமிழ்தாய் வாழ்த்து இருக்காது எனவும் அதற்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தான 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே.. மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே...' என்கிற பாடல்தான் தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் ஒரே தமிழ்தாய் வாழ்த்தாக இருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த புத்தக காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்த நிலையில், புத்தக காட்சியில் நடைப்பெற்ற தனியார் பதிப்பக நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தான நீராருங் கடலுடுத்த பாடல் புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'திராவிட அதிகாரங்களால் வீழ்த்தப்பட்ட தமிழர்கள்'

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசிய சீமான், நூலினை துணிந்து வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிடுவது மிகவும் முக்கியமானது. போர்களத்தில் துப்பாகியை விட வலிமையானது புத்தகங்கள் தான் என்று லெனின் கூறினார். தமிழினம் கொன்றழிக்கப்பட்ட காலத்தில் திரையரங்கில், கேளிக்கை விடுதிகளிலும் இருந்த தமிழினம் எழுச்சி பெற வேண்டும் என முத்துக்குமார் கூறினார். இந்திய திராவிட அதிகாரங்களால் அழுத்தி வீழ்த்தப்பட்டவர்கள் தமிழர்கள்.

இதர மொழியினர் தமிழ் படித்தால் தமிழ் பற்றாளர், உணர்வாளர் எனக் கூறலாம். தமிழரே தமிழ் பற்றாளர், உணர்வாளர் என்று கூறுவது ஏற்புடையத்தல்ல. என்னை தமிழ்பற்றாளர் எனக் கூறும் போது புற்றாளர் என்பது போல் இருக்கும். இருமொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை.

தமிழ் தேசியம் என்பதை தற்போது வேற்றுக் கிரகசொல், தீண்டத்தகாத சொல் எனவும்.. தமிழினம் என்று கூறுவது பாசிசம், செபரேட்டிசம், நகர்ப்புற நக்சலிசம் என்றுக் கூறப்படுகிறது. இவையெல்லாம் தற்போது அமைதிப்படுத்தப்பட்டு வருகிறது. 2026 க்குப் பின்னர் யாரும் வாய்திறக்க முடியாது. இந்திய திருடர்கள் தாலியை அறுப்பார்கள்.. திராவிட திருடர்கள் கழுத்தையே அறுப்பார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக இந்தியாவை ஒரே நாடாக உருவாக்கினர். இந்தியா என்பது ஒரே துணியில் தைத்த சட்டை அல்ல. பல துணிகளில் தைத்த சட்டை என்றார்.

'எங்களுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை'

இதற்கு மத்தியில், டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் பாடல் மாற்றி பாடப்பட்டதற்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் முதல்வரை தாக்கி பேசியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் பொறுப்பேற்காது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை'' என விளக்கம் அளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details