தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாக்கெட்டில் இருந்து செலவிட முடியாது, அரசு நிதி வேண்டும்" - மாவட்ட ஆட்சியரின் பேச்சால் மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி! - response of karur collector

karur collector issue: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுவை பெற்ற கரூர் ஆட்சியர், அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படும் சம்பவத்தால், மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி அடைந்தனர்.

கடிந்து கொண்ட கரூர் கலெக்டர்
பாக்கெட்டில் இருந்து செலவிட முடியாது, அரசு நிதி வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 11:07 PM IST

Updated : Feb 6, 2024, 10:18 AM IST

பாக்கெட்டில் இருந்து செலவிட முடியாது, அரசு நிதி வேண்டும்

கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியிடம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இதுவரை கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் முகாம்களின் போது, அம்மாவட்டத்தில் பதவி வகித்த ஆட்சியர்கள் தொடர்ந்து கடுமையாக நடந்து கொண்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டிருப்பது மக்களிடையே அரசு மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.05) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை மனுவாக வழங்கினர். அப்போது கார்த்திகேயன், செல்லப்பா, முருகேசன், பாலாஜி, வள்ளி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு சார்பில் தோரணக்கல்பட்டி அரசு அடுக்குமாடி குடியிருப்பில், வீடு ஒதுக்கீடு செய்வதற்காக பயனாளிகள் பங்களிப்பில், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும், பணம் செலுத்தி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை வீடு ஒதுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரசு நிதி பெற்று இன்னும் மூன்று மாதங்களுக்குள் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல மாதங்களாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி செல்லப்பா, ஒவ்வொரு முறையும் மனு கொடுக்க வரும்போது இவ்வாறு பதிலளித்தால், என்ன செய்வது என கேட்டு, திடீரென மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல், “உங்களுடன் அமர்ந்து பேசுவதற்கு எனக்கு நேரமில்லை, அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும், எனது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவு செய்ய முடியாது” என ஆவேசமாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த மற்றொரு மாற்றுத்திறனாளி கார்த்திகேயன், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யோக பேட்டியில், “இரண்டு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும், எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மாவட்ட ஆட்சியரிடம், இது குறித்து முறையிட்டால் அவர் அலட்சியமாக, தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவு செய்ய முடியுமா என கேட்கிறார். மாவட்ட ஆட்சியரின் இது போன்ற அலட்சியமான பதில் எங்களை மிகவும் பாதிக்கிறது” என தெரிவித்தார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் 25 மாற்றுத்திறனாளிகள் இது போல பணம் செலுத்தியுள்ள நிலையில், வீடு ஒதுக்கீடு செய்யப்படாததால், வாடகை வீட்டில் வாடகை செலுத்த முடியாமலும், செலுத்திய தொகைக்கு கடன் கட்ட முடியாமலும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த கட்டமாக, தமிழக முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக காத்திகேயன் தெரிவித்தார்.

இது குறித்து கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி செல்லப்பா பேசுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய பணம் செலுத்தி இரண்டு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எப்போது மனு அளித்தாலும் மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்த வேண்டும். இன்னும் சில தினங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தல் விதிமுறைகள் படி, அரசின் நலத்திட்டங்கள் வழங்க முடியாது என்பதால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என கோரிக்கை விடுத்தார்.

இது போன்ற சம்பவங்கள் கரூர் மாவட்டத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன், புகார் அளிக்க வந்த இளைஞரிடம், “ஆட்சியர் என்ன சரவணபவன் சர்வரா?” என கேட்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அதே போல கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர், மது கடையை மூடக்கோரி மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்களை, வெளியே போங்கள் என கூறி கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தென்னிலை விவசாயி ராஜாவை குண்டர் சட்டத்தில் போடுவேன் என அவர் தொலைபேசியில் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிசம் விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரிகளத்திற்கு தார்சாலை கேட்டு, மனு கொடுக்க சென்ற விவசாயி குழந்தவேலுவை “போடா வெளியே” என்று அவர் கடுமையாக பேசியது சர்ச்சையானது.

இதே போன்ற சம்பவம் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருவது, மக்களிடம் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில், சம்பளம் பேறும் அதிகாரிகள், மக்களின் கோரிக்கைகளுக்கு குறைந்தபட்ச ஆறுதலான வார்த்தைகளை கூட பேசாமல், அலட்சியமாக பதிலளிப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் கைது!

Last Updated : Feb 6, 2024, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details