ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 19 ஆவது வார்டு கைகாட்டி வலசு சுப்பிரமணிய நகர்ப் பகுதியில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய தார்ச் சாலை போடும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என அப்பகுதியில் பொதுமக்கள் சார்பில் முன்னதாகவே புகார்கள் அடுக்கப்பட்டன.
ஆனாலும் பொதுமக்களின் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அப்பகுதியில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைகாட்டி வலசு சுப்பிரமணிய நகர்ப் பகுதியில் நேற்று முன்தினம்(பிப்.12) போடப்பட்ட புதிய தார்ச் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்டுள்ளது.