மதுரை:மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் திருமங்கலம் அருகே அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச் சாவடி. இதனைக் கடந்துதான் அருகே உள்ள திருமங்கலம், விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, கன்னியாகுமரி மட்டுமன்றி திருமங்கலம் அருகே பிரிந்து செல்லும் சாலையில் திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும்.
மதுரை - கன்னியாகுமரி சுங்கவழி தனியார் நிறுவனம் (Madurai Kanniyakumari Tollway Pvt Limited - MKPTL) என்ற நிர்வாகத்தின் கீழ், இந்த சுங்கச்சாவடி சுமார் 52.3 கிமீ தூரத்தை நிர்வகிக்கும் வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வரை 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் எம்கேடிபிஎல் (MKPTL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்: நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றன. இதே மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரி - எத்தூர்வட்டம், சாலைப்புதூர் - மதுரை, நாங்குநேரி - கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுங்கவழி தனியார் நிறுவனங்களின் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மதுரை - கன்னியாகுமரி டோல் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திருமங்கலம், கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். காரணம், இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் உள்ளூர் மக்களுக்கும் கட்டணம் விதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி அங்கே பிரச்சனைகள் எழுவதாகவும், அதனால் இந்த சுங்கச்சாவடியை முழுவதுமாக அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுங்கக் கட்டணத்தால் கொந்தளிக்கும் உள்ளூர் மக்கள்: கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.100, இருமுறை சென்றுவர ரூ.150, மாதாந்திரக் கட்டணம் ரூ.3,360 எனவும், வேன், சிற்றுந்து ஒரு முறை செல்ல ரூ.165, இருமுறை சென்று வர ரூ.245, மாதாந்திர கட்டணம் ரூ.5,430 எனவும், பெரிய வாகனங்களுக்கு ரூ.340, இருமுறை சென்று வர ரூ.510 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புதான் அப்பகுதி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் இதை கண்டுகொள்வதே இல்லை:இதுகுறித்து கப்பலூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் செல்வியின் கணவர் பரமசிவம் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 2020 வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் இந்த சுங்கச்சாவடியில் கெடுபிடி செய்ய ஆரம்பித்தனர். இதற்காக போராட்டம் நடத்தினால் தற்காலிகமாக வாங்காமல் அனுமதிப்பர். ஆனால் மறுபடியும் பிரச்சனை தொடரும்.
உள்ளுர் வாகனங்களுக்கான அனுமதி குறித்து எழுத்துப்பூர்வமாக வழங்க வலியுறுத்தினால் அதுகுறித்து சுங்க நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. இதற்கான போராட்டத்தில் காவல்துறை அவர்களுக்கே ஆதரவாக உள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கான பாதையிலும்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். அருகில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. அதனால், நாள்தோறும் இந்த பாதையைக் கடந்துதான் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பலமுறை சென்றுவர வேண்டும்.