சென்னை:மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுவது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி வெளியேற்ற செய்கிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் 8,373 ஏக்கர் பரப்பளவில் இருந்து வருகின்றன. சட்டப்படியாக 2028 ஆம் ஆண்டு தான் குத்தகை காலம் நிறைவடைகிறது. ஆனால் இப்போதே தொழிலாளர்களை வெளியேற்றுவதன் அவசியம் என்ன? மாஞ்சோலையில் இயற்கை உரங்களின் மூலம் தேயிலை உற்பத்தியாகி வருகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி தளமாக மாஞ்சோலை விளங்குகிறது. அங்கு பணிபுரிபவர்கள் கொத்தடிமைகளாக நடத்தபடுத்துகிறர்கள். நாளொன்றுக்கு 490 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (BBTC) நிறுவனம் 45 நாட்களுக்குள் அங்குள்ளவர்களை கட்டாயமாக வெளியேற்ற கையெழுத்து பெற்றுள்ளார்கள்.
மாஞ்சோலை தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளருக்கு கடிதம் எழுதியும் இன்றுவரை பதில் இல்லை, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நீக்கி அவர்களை வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை யாரிடம் ஒப்படைக்க போகிறீர்கள்?