தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு - ஸ்தம்பித்தது மதுரை! - TUNGSTEN PROTEST

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டகாரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டங்கஸ்டன் போராட்டம்
டங்கஸ்டன் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 5:14 PM IST

Updated : Jan 7, 2025, 5:41 PM IST

மதுரை:மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து, கடந்த நவம்பர் மாதம் முதல் மேலுரை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேலூர் வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் துணையோடு டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு, அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத் தெரு, வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் இன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

டங்கஸ்டன் போராட்ட குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

இதற்காக, நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாக திரண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. இருந்தும் தடையை மீறி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு நடை பயணமாக மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்திறாகு வந்து சேர்ந்தனர்.

தமுக்கம் மைதானம் முன்பு சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பியவாறு பேரணியில் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஒத்தக்கடையில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை, ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும், வணிகர் சங்கங்களும், உழவர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க
  1. "அடுத்த தலைமுறை இருக்குமா?" டங்ஸ்டன் திட்டத்தில் மதுரை மேலூர் மக்கள் வேதனை!
  2. "எங்க மண்ணுதான், எங்க மானம்" டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்; மலை மீதேறி மக்கள் போரட்டம்!
  3. சென்னை ஐஐடி: ஆசியாவிலேயே பெரிய ஆழமற்ற கடல் அலை படுகை!

போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக போராட்டக்காரர்கள் ஒரு சிலர் அறிவித்தாலும், தொடர்ந்து தமுக்கம் மைதானத்தின் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வருவதால் இப்போராட்டத்தில் குழப்ப நிலை நீடித்து வருகிறது.

டங்ஸ்டன் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும் இயக்கத்தினர் (ETV Bharat Tamil Nadu)

நரசிங்கம்பட்டி, பெருமாள் மலை அருகிலிருந்து தொடங்கிய இந்த பேரணி, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே சட்டக் கல்லூரி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக ஒரு பிரிவினரும், மற்றொரு பிரிவினர் அண்ணா மாளிகை தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாகவும் வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தமுக்கம் மைதானத்தின் முன்பாக நெடுஞ்சாலையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமர்ந்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்பாக விவசாயிகள் சங்க தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், ரத்தினவேல், ஜெகதீசன் உள்ளிட்டோர் உரையாற்றி வருகின்றனர்.

Last Updated : Jan 7, 2025, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details