ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைக்கப்படாததால் போராட்டம் தேனி: பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி அழைக்கப்படாததால் தன் ஆதரவாளர்களுடன் வந்த சக்கரவர்த்தி கூட்டம் நடைபெறும் மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனி தனியார் மண்டபத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்.10) நடைபெற்றது. இந்த கூட்டம் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படாததால், கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வந்த சக்கரவர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படாமல், தன்னிடம் கூறாமல், மாநில கூட்டம் நடைபெறக் கூடாது என்று, மாநில பொதுச் செயலாளர் கதிரவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்கரவர்த்தியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களது கார்களை போலீசார் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயற்சித்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் கதிரவன் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதையும் படிங்க: "திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய கமல்ஹாசன் போன்றோர்களின் முகம் தேவைப்படுகிறது" - குஷ்பு பேச்சு!