ஈரோடு: ஈரோடு மாநகரம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளி சந்தைகள் புகழ் பெற்றவை. இப்பகுதியில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிகம் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இப்பகுதியில், அரசு தரப்பில் ஜவுளிக் கடைகளுக்கென பிரத்தியேக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அந்த வணிக வளாகம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் செல்லும் மணிக்கூண்டு முதல் எல்லை மாரியம்மன் கோயில் வரையிலான பிரதான சாலையில், சுமார் 700க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆக்கிரமிப்புக் கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில், பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டியும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குபடுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கும், தங்கள் கடைகளை அகற்ற கால அவகாசம் அளித்தும், யாரும் கடைகளை அகற்றவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.15) காலை அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.