திருநெல்வேலி:2024 நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே, இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத அரசியல் கட்சி வேட்பாளர்கள், அடுத்தடுத்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் விதிப்படி, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவர்களது அசையும் சொத்து, அசையா சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்து மதிப்பின் முழு விவரங்களையும் காண்பிக்க வேண்டும். குறிப்பாக, வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் கட்டாயம் காட்ட வேண்டும். மேலும், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வேட்பாளர்கள் காண்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள், வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதில் தங்கள் சொத்து விவரங்களை காட்டியுள்ளனர். அதில், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காட்டியுள்ள சொத்து விவரங்களில், தன்னை விட தனது மனைவி பெயரில் அதிக சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையில் அதிமுகவில் பணியாற்றி, பின்னர் அரசியலில் தடம் பதித்தவர் நயினார் நாகேந்திரன். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். மேலும், இவருக்கு ஹோட்டல் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளன. இவர் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்.
நயினார் நாகேந்திரன், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது பெயரில் தங்கம், வெள்ளி உள்பட நகைகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.
அதேநேரம், தனது மனைவி பெயரில் 18 லட்சம் மதிப்புள்ள 300 பவுன் தங்க நகைகள் இருப்பதாக கணக்கு காட்டி இருந்தார். தொடர்ந்து, 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதே அதிமுக சார்பில் போட்டியிட்டபோது, தனது பெயரில் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 பவுன் நகைகள் இருப்பதாகவும், மனைவி பெயரில் 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 பவுன் நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தனது பெயரில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 பவுன் தங்க நகைகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 பவுன் தங்க நகைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டி இருந்தார்.
பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இவர், தனது பெயரில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 பவுன் நகைகளும், தனது மனைவி பெயரில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 பவுன் நகைகளும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி, நேற்று (மார்ச் 26) மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியர் கார்த்திகேயனிடம், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் காட்டியுள்ள சொத்து விவரங்களில், தனது பெயரில் 1 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள 240 பவுன் தங்க நகைகளும், தனது மனைவி பெயரில் 2 கோடியே 68 லட்சம் மதிப்புள்ள 560 பவுன் தங்க நகைகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, கடந்த 18 வருடங்களில் நயினார் நாகேந்திரன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகளை வாங்கி இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல், 2006இல் தனது பெயரில் அம்பாசிடர் உள்பட 2 கார் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது பெயரில் 3 சொகுசு கார்கள் உள்பட ஐந்து கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பை பொறுத்தவரை, வேட்பு மனுவில் தனது பெயரில் அசையும் சொத்து 12 கோடி ரூபாய் அளவில் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் அசையும் சொத்து 12.03 கோடி ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் காட்டியுள்ளார். இதன் மூலம், தன்னைவிட தனது மனைவி பெயரில் அதிக சொத்துக்களை அவர் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து எதிர்கட்சியைச் சேர்ந்த சிலர், நயினார் நாகேந்திரன் 2006ஆம் ஆண்டு தனது பெயரில் நகைகள் ஏதுவும் இல்லை எனக் கூறிய நிலையில், தற்போது 240 பவுன் தங்க நகைகள் இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இதை பொதுமக்கள் கவனிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் முதல் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை.. பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்! - PMK MANIFESTO