சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரு ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தல் இன்று (பிப்.13) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இன்று (பிப்.13) ஆட்சிப் பேரவை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தலில், ஒரு பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் காலை 11 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்தல், ஆட்சி பேரவை கூட்டம் நடத்தியதால் பிற்பகல் வரை நடைபெறாமல் இருந்தது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் அரசு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்திடத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த பின்னரும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.