கோயம்புத்தூர்:பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் இருந்து பேராசிரியர் எஃப்.எக்ஸ். லவ்லினா லிட்டில் ஃப்ளவர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் காளிராஜ் கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநருக்கும் இடையிலான மோதல் காரணமாக, புதிய துணைவேந்தர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.
அதனால் சுமார் இரண்டரை ஆண்டுகளாக துணைவேந்தர் பொறுப்புக் குழு மூலமாகவே பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. உயர் கல்வித்துறை செயலர் தலைமையிலான இந்த குழுவில், பல்கலைக்கழக நியமனமாக சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் எஃப்.எக்ஸ். லவ்லினா லிட்டில் ஃப்ளவர், ஆளுநரின் நியமனமாக கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் செயலர் வாசுகி, தமிழ்நாடு அரசின் நியமனமாக தமிழ்நாடு சுயநிதிக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் அஜித்லால் மோகன் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பொறுப்புக் குழுவில் இருந்து லவ்லினா லிட்டில் ஃப்ளவர் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான உயர் கல்வித்துறையின் செயலரின் ஒப்புதலின்றியே பல விவகாரங்களை லவ்லினா கையாண்டதாகப் புகார்கள் எழுந்து வந்துள்ளது. மேலும், தகுதியற்ற உதவிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது, அதிகாரத்தை மீறி 28 சுயநிதிக் கல்லூரிகளில் முதல்வர் நியமனத்தை அனுமதித்தது, தனிப்பட்ட முறையில் சில பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட 11 புகார்களை ஆசிரியர் சங்கங்கள் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பேராசிரியர் லவ்லினா துணைவேந்தர் பொறுப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பயணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார்... தெற்கு ரயில்வேக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்!
இந்த சம்பவம் தொடர்பாக பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன் புதன்கிழமை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 360 ஆவது சிண்டிகேட் கூட்டம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறையின் சிண்டிகேட் உறுப்பினர், பேராசிரியர் எஃப்.எக்ஸ். லவ்லினா லிட்டில் ஃப்ளவரை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் துணைக்குழு மற்றும் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும், துணைவேந்தரின் அதிகாரங்களிலிருந்தும், கடமைகளிலிருந்தும் விலக்கி வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக" கூறியுள்ளார். ஆசிரியர் சங்கங்களின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.